ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: புதிய உச்சத்தை எட்டிய பரிசுத்தொகை!

Updated: Mon, Sep 01 2025 20:11 IST
Image Source: Google

ICC Women's ODI World Cup 2025 Prize Money:  2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) அறிவித்தது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை சமீபத்தில் அறிவித்தது. இதில் பாகிஸ்தான் மகளிர் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

 

இந்த நிலையில் இத்தொடருக்கான பரிசுத்தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி மொத்த பரிசுத் தொகை $13.88 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.122 கோடியாகும். இது கடந்த 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற முந்தைய உலகக்கோப்பை தொடரின் பரிசுத் தொகையான $3.5 மில்லியனை விட 297 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில், இந்தப் பரிசுத் தொகை 2023 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையின் பரிசுத் தொகையை விடவும், $3 மில்லியன் டாலர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு $4.48 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ.39 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா தனது ஏழாவது உலகக் கோப்பையை வென்றதற்காக பெற்ற $1.32 மில்லியனை விட 239 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆடவர் உலகக் கோப்பையில், வென்ற அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ.33 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டிருந்தது. இது தவிர, இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்கள் அதாவது 19.74 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

Also Read: LIVE Cricket Score

மேலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு ரூ.9.8 கோடியும், குழு நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றால் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில், ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களைப் பிடிக்கும் அணிக்கு 7 லட்சம் டாலர்கள் (6.17 கோடி) மற்றும் ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பிடிக்கும் அணிக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டாலர்கள் (2.46 கோடி) கிடைக்கும். இதுதவிர இந்த தொடரில் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் ரூ.2.20 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை