சுட்டெரிக்கும் வெயில்; ஆசிய கோப்பை போட்டி நேரங்கள் மாற்றம்!
Asia Cup Time Update: துபாய் மற்றும் அபுதாபியில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் நிலவுவதன் காரணமாக போட்டிகள் அரை மணி நேரம் தாமதமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த தொடரின் முதல் போட்டியில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி செப்டம்பர் 10-ம் தேதி முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது. மேலும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான போட்டி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டி நடைபெற இருக்கும் துபாய் மற்றும் அபுதாபியில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் நிலவுவதன் காரணமாக போட்டிகள் அரை மணி நேரம் தாமதமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்சமயம் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏனெனில் வழக்கமாக டி20 போட்டிகள் இந்தியாவில் 7 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிக்குள் முடிவடையும், ஆனால் தற்சமயம் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குவதால் நள்ளிரவு வரை போட்டிகள் நடைபெறும் என்பதால் அது ரசிகர்களை சற்று சோர்வடைய செய்துள்ளது.
இந்திய அணி: அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன், ரின்கு சிங்