டிராவில் முடிந்த இந்தியா - கவுண்டி லெவன் பயிற்சி ஆட்டம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கவுண்டி லெவன் அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.
ஜூலை 20ஆம் தேதி டர்ஹாமில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. மேலும் இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 101 ரன்களையும், ஜடேஜா 75 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய கவுண்டி லெவன் அணியும் இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களில் ஆல் அவுட்டானது. அந்த அணில் அதிகபட்சமாக ஹாசீப் ஹமீத் 112 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
அதன்பின் 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 192 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மீண்டும் அரைசதம் கடந்து 51 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் மூன்றாம் நாளின் கடைசி செக்ஷனில் 284 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கவுண்டி லெவன் அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை எடுத்த நிலையில் போட்டி முடிவடைந்தது. இதனால் இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.