தி அல்டிமேட் டெஸ்ட் தொடர்: முதலிடத்தை தட்டிச் சென்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை!

Updated: Wed, Jun 09 2021 11:44 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெற உள்ள நிலையில் இதுவரை நடந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே உச்சக்கட்டமாக மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? என்பதை அறிய சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தது. 

இதையடுத்து 144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்த 16 தொடர்களை அடையாளம் கண்டு வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டது. இதில் 1882ஆம் ஆண்டு, 1932ஆம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளும் இடம் பிடித்தன.

இதில் இந்தியா-ஆஸ்திரேலியா (2001) தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா (2020-21) தொடர், இந்தியா-பாகிஸ்தான் (1999 )தொடர், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (2005) ஆஷஸ் தொடர் ஆகியவை முதல் நான்கு இடங்களை பிடித்திருந்தன. அதிலும் இந்தியா-ஆஸ்திரேலியா (2020-21), இந்தியா-பாகிஸ்தான் (1999) தொடர்கள் அதிகளவிலான வாக்குகளைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

உச்சக்கட்ட டெஸ்ட் தொடரை தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை ஆர்வமுடன் பதிவிட்டனர். இதன் முடிவில் 2020-21ஆம் ஆண்டில் நடந்த முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. இதனை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

 

இந்திய அணி கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இதில் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டின் 2ஆவது இன்னிங்ஸில் இந்தியா வெறும் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. டெஸ்டில் இந்தியாவின் குறைந்த ஸ்கோராகவும் இது அமைந்தது. 

அதோடு குழந்தை பிறப்புக்காக முதலாவது டெஸ்டுடன் இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்பினார். போட்டி கடைசி கட்டத்தை நெருங்குவதற்குள் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, அஸ்வின், ஹனுமா விஹாரி என்று ஒவ்வொரு முன்னணி வீரர்களாக காயத்தில் சிக்கினர். 

ஆனாலும் அஜிங்யா ரஹானே தலைமையில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு அவர்களது இடத்திலேயே கடும் நெருக்கடியைக் கொடுத்தது. குறிப்பாக பிரிஸ்பேனில் 32 ஆண்டுகளாக தோல்வியே சந்திக்காமல் இருந்த  ஆஸ்திரேலிய அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனைப்படைத்தது.

அப்போட்டியில் 328 ரன்கள் இலக்கை இந்திய அணி ரிஷாப் பந்த்தின் (89 ரன்) அதிரடியோடு 3 விக்கெட் வித்தியாசத்தில் எட்டிப்பிடித்து அசத்தியது. மேலும் நடராஜன், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், சுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர் ஆகிய புதுமுக வீரர்களின் ஆட்டம் வெகுவாக கவனத்தை ஈர்த்தன. இந்த போட்டியின் முடிவு அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதனால் தான் ரசிகர்கள் அதிக அளவில் ஓட்டு போட்டு இதை மிகச்சிறந்த டெஸ்ட் தொடராகத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

இப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி 1999ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் நடந்தது. இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது. இதில் டெல்லியில் நடந்த டெஸ்டில் ஒரு இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சரித்திரம் படைத்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை