முகமது ஷமியை விட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து விட்டார்கள் - ரிக்கி பாண்டிங்!
வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும் ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.
இதுவரை நடைபெற்ற டி20 தொடர்களை விட இந்த ஆசிய கோப்பையில் தான் டி20 உலகக் கோப்பையில் விளையாடப் போகும் இறுதிகட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. அதனால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, அரஷ்தீப் சிங் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த அணியில் முகமது சமி மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்படாதது நிறைய முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை வைத்துள்ளது. குறிப்பாக ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணியில் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை 8.00 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து கோப்பையை வெல்ல துருப்பு சீட்டாக செயல்பட்ட முகமது ஷமி இந்த அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.
கடைசியாக துபாயில் நடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் முழுமையாக விளையாடிய அவருக்கு அதன்பின் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் வழங்கவில்லை. தற்போது 31 வயதை கடந்துவிட்டதால் ஷமிக்கு பதில் கடந்த உலகக்கோப்பைக்குப்பின் வாய்ப்பு பெற்று அசத்த தொடங்கியுள்ள ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அரஷ்தீப் சிங் போன்ற அடுத்த தலைமுறை இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கலாம் என தேர்வுக்குழு கருதுகிறது.
அதனால் இனிமேல் இந்தியா டி20 அணியில் உங்களுக்கு இடமில்லை என்று வெளிப்படையாகவே ஷமியிடம் தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் ஆசிய கோப்பையில் அவர் இடம்பெறாதது அதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அத்துடன் இப்போதும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்மை பவுலராக விளையாடும் அவர் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அட்டகாசமாகப் செயல்படுகிறார். எனவே பணிச்சுமையை குறைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புத்துணர்ச்சியுடன் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பவுலராக செயல்படும் வகையில் ஷமியை உபயோகப்படுத்த இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அதனால் இனிமேல் இந்தியா டி20 அணியில் அவர் விளையாடுவதை பார்க்க முடியாது என்று வெளிப்படையாக கூறலாம். ஆனால் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் 37 வயதில் அசத்தும் போது 31 வயதில் முகமது சமி சிறப்பாக செயல்பட மாட்டாரா என்றும் திறமை உள்ளவர்களுக்கு வயது வெறும் நம்பர் என்றும் அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமையில் தற்போதைய இந்திய டி20 அணியில் முகமது ஷமியை விட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து விட்டதால் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் புத்துணர்ச்சியுடன் பயன்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு சரிதான் என்று ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசிய அவர், “கடந்த பல வருடங்களாக அவர் இந்தியாவின் மிகச்சிறந்த பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவரது பலம் என்ன என்று நீங்கள் பார்த்தால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக அசத்தி வருகிறார். எனவே ஷமியை காட்டிலும் ஆசிய கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள 3 வேகப்பந்து வீச்சாளர்களை போல இந்தியாவிடம் நல்ல திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஒருவேளை 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்திருந்தால் அவர் என்னுடைய 4ஆவது வேகப்பந்து வீச்சாளராக இருந்திருப்பார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் வருவார்கள் என்று நினைக்கிறேன். மேலும் ஆஸ்திரேலிய மைதானங்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமில்லை என்றாலும் அவர்கள் கணிசமான சுழல் பந்துவீச்சாளர்களை அழைத்து வருவார்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், அரஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் போன்ற பவுலர்கள் இருப்பதால் ஷமியை டி20 கிரிக்கெட்டில் பயன்படுத்தாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தாது என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.