அவரைக் கட்டுப்படுத்த எந்த பவுலர்களாலும் முடியாது - சூர்யகுமார் யாதவை புகழ்ந்த மஞ்ச்ரேக்கர்!

Updated: Thu, Aug 04 2022 15:33 IST
"There isn’t a length or line or certain pace that can keep him quiet" - Sanjay Manjrekar (Image Source: Google)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவுக்கு 2ஆவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை சமன் செய்தது. 

இந்நிலையில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 165 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறினார். இருப்பினும் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அவர் இல்லாத நிலைமையில் பொறுப்புடனும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

கடந்த 2021இல் அறிமுகமாகி கடந்த ஒரு வருடத்திற்குள் எஞ்சிய இந்திய வீரர்களைக் காட்டிலும் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அவர் சமீபத்திய இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் தனி ஒருவனாக 117 ரன்கள் குவித்து வெற்றிக்காகப் போராடியது பலரின் பாராட்டுக்களைப் பெற்றது.

அந்த வகையில் பொதுவாகவே 3, 4 ஆகிய மிடில் ஆர்டர் பேட்டிங் இடத்தில் களமிறங்கி மிரட்டக் கூடியவராக இருக்கும் அவர் இந்த தொடரில் சம்மந்தமே இல்லாமல் தொடக்க வீரராக களமிறங்கி முதல் 2 போட்டிகளில் தடுமாறினார். அதனால் அந்த முடிவை எடுத்த ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர். இருப்பினும் 3ஆவது போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று அந்த விமர்சனங்களை தூளாக்கிய அவர் தம்மால் அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நிரூபித்ததுடன் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவிலியர்ஸ் போல மைதானத்தின் நாலா புறங்களிலும் ரன்களை வெளுத்து வாங்கினார்.

அதுவும் பவுன்ஸ் ஆகி வரும் பந்தை பேக்லிப்ட் முறையில் அசால்ட்டாக சிக்ஸராக தெறிக்கவிட்ட அவர் பந்துக்கு கீழே அமர்ந்து கீப்பருக்கு மேலே பறக்க விட்ட பவுண்டரியை பார்த்து மெய்சிலிர்த்தப் போனார்கள். அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் எவ்வளவு தரமான பவுலர் எந்த வகையான லைன், லென்த்களை பயன்படுத்தி கடினமாக பந்து வீசினாலும் அதை அடிக்கும் திறமை சூரியகுமார் யாதவிடம் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய மஞ்ச்ரேக்கர், “கடந்த 5 வருடங்களில் ஒரு பேட்ஸ்மேனாக சூர்யாவின் வளர்ச்சி அபாரமானது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஸ்கொயர் லெக் பகுதிக்கு மேல் ப்ளிக் ஷாட் அடிப்பது மட்டுமே அவருடைய முதன்மை ஷாட்டாக இருந்தது. ஆனால் தற்போது அனைத்து வகையான ஷாட்களும் அவரிடம் உருவாகியுள்ளது. எனவே அதிரடியை காட்ட விடாமல் அவரை அமைதியாக பேட்டிங் செய்ய வைக்கும் அளவுக்கு எந்த லைன் அல்லது லென்த் அல்லது வேகம் யாரிடமும் கிடையாது” என்று கூறியுள்ளார்.

சமீப காலங்களில் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் ஐசிசி தரவரிசையில் மளமளவென முன்னேறி 22 போட்டிகளிலேயே உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக அபார வளர்ச்சி கண்டுள்ளார். சொல்லப்போனால் டாப் 10 டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் இடம் பிடித்துள்ள ஒரே இந்திய வீரராக சாதனை படைத்து வரும் இவர் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை பிடிப்பதற்கு இன்னும் 3 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளில் கணிசமான ரன்களை குவித்தாலே முதல் இடத்திற்கு முன்னேறி உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக சூரியகுமார் யாதாவ் சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை