அவர்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் - இன்சமாம் உல் ஹக் விமர்சனம்!
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இன்சமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார்.
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் அணி, அனுபவமில்லாதா இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியைச் சந்தித்து தொடரை இழந்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு தரப்பினரும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டி போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள் என முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் விளையாட முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் மிகப்பெரிய ஷாட்ஸ் அடிக்கிறார்கள். ஸ்ட்ரைக் மாற்றி விளையாடவில்லை. 151 பந்துகளில் ரன்கள் அடிக்கவில்லை. 50 ஓவர்கள் வரை நிலைத்து நிற்கவில்லை. ஃபகர் ஸமான் 50 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆகவே, பந்து வீச்சாளர் உங்கள் மீது நெருக்கடியை உண்டாக்குகிறார்.
ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் நான்கு பந்துகளில் ரன்கள் அடிக்காமல், அடுத்த பந்தை தூக்கி அடிக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக் மாற்றி, சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் 150 அல்லது 190 ரன்கள் மட்டுமே அடிக்க முடியும்.
ஷகீல் சரியான வகையில் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறார். அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிக்கவில்லை. ஆனால், நெருக்கடியான நிலையில் ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணிக்கு இது சிறந்த விசயம். அவர் அதில் கவனம் செலுத்தி ஆதிக்கம் செய்ய முடியும். மேலும் அவருடைய நம்பிக்கை, டெக்னிக் சிறப்பாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.