இவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளனர் - எம்எஸ் தோனியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Mon, Apr 24 2023 12:07 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசனில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ஐந்து வெற்றிகள் உடன் முதலிடத்தை பிடித்தது.

இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கான்வே 56, சிவம் துபே 51, ரகானே 71 என மூன்று அதிரடி அரை சதங்கள் வர மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 235 ரன்கள் வந்தது.

இதை அடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு நல்ல துவக்கம் எதுவும் அமையவில்லை. காயமடைந்த ஜேசன் ராய் 61 ரன், இறுதிவரை களத்தில் நின்ற ரிங்கு சிங் 53 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி, “இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. அவர்கள் எனக்கு பிரியாவிடை (Farewell) கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும். அவர்களின் ஆதரவிற்கு நன்றி. இவர்களெல்லாம் அடுத்தப் போட்டியில் தங்களின் சொந்த அணியான கொல்கத்தாவின் ஜெர்சிக்கு மாறிவிடுவார்கள் என நம்புகிறேன்"

வேகப்பந்து வீச்சாளர்கள் பவர்ப்ளேயில் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்துவிட்டார்கள். ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களைப் பார்த்துக் கொண்டார்கள். மைதானத்தின் ஒரு பக்க பவுண்டரி குறைவான தூரத்தைக் கொண்டதாக இருந்தது. அதற்கேற்ப நாங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டோம். ஒரு வீரர் காயமடைந்துவிட்டால் அவரால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்பதை நான் அறிவேன். அப்படியான நேரங்களில் நன்கு தயாராக இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

மேலும் ரஹானே குறித்தான கேள்விக்குப் பதில் கூறிய தோனி, “ரஹானேவின் திறன் என்ன என்பது தெரியும். அவர் விருப்பப்படும் விதத்தில் ஆடும் சுதந்திரத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். உங்களுடைய பலங்களை அறிந்து நேர்மறையான எண்ணத்தோடு அனுபவித்து ஆடுங்கள் என்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரை. மேலும், அவர் எந்த இடத்தில் ஆடினால் சௌகரியமாக உணர்வாரோ அதையும் உறுதி செய்து கொடுத்திருக்கிறோம்" என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை