ஐபிஎல் 2022: கோலி, ரோஹித்துக்கு எதிராக பந்துவீசுவது குறித்து மனம் திறந்த அஸ்வின்!

Updated: Fri, Apr 01 2022 14:22 IST
Image Source: Twitter

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை கூட்டிவருகிறது. அதிலும் உள்ளூர் இளம் வீரர்களின் திறன் ரசிகர்களை பிரம்மிப்படைய வைத்துள்ளது.

மேலும் விராட் கோலி, எம் தோனி, ரோஹித் சர்மா போன்ற இந்திய வீரர்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருவது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது குறித்து தனியார் கிரிக்கெட் இணையத்தளத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் பேசிய அவர், “விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு எதிராகப் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய அணியில் நான் விளையாடும் வீரர்களில் அவர்களிருவரும் மிகத் தரமான பேட்டர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இவர்களுக்கு எதிராகப் பந்துவீச எனக்கு வாய்ப்பு கிடைக்காது. 

ஆனால் ஐபிஎல் போட்டியில் அவர்களுடன் மோத வாய்ப்பு கிடைக்கும். எனவே அவர்களுக்கு எதிராக விளையாட ஆர்வமாக இருப்பேன். இந்திய அணி வீரர்களிடம் ஆட்டமிழக்க கோலியும் ரோஹித்தும் விரும்ப மாட்டார்கள். எனவே அவர்களுடனான போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த இரு ஆட்டங்களில் மும்பை, ஆர்சிபி அணிகளுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. இதனால் இவ்விரு ஆட்டங்களிலும் ரோஹித் சர்மா, கோலியை அஸ்வின் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்று பார்க்கலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை