அனைத்து வீரர்களும் பங்களித்ததால் நாங்கள் இத்தொடரை வென்றோம் - மஹீஷ் தீக்ஷனா!

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும், பதும் நிஷங்கா 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இதில் அதிகாட்சமாக ரோஹித் சர்மா 35 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில்க் துனில் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் இந்திய அணி 26.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும்வென்றது.
மேலும் இப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இலங்கை வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும், இத்தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய இலங்கை வீரர் துனித் வெல்லாலகே தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினர். மேற்கொண்டு கடந்த 1997ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கை அணியானது இந்தியாவை வீழ்த்தி இருதரப்பு தொடரை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய அணி பெரும்பாலும் சிறிய மைதானங்களில் நல்ல பிட்ச்களில் விளையாடுவார்கள் என்று இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய மஹீஷ் தீக்ஷ்னா, “என்னைப் பொறுத்தவரை, இந்த வெற்றியனது ஒரு அணியாக எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். டி20 தொடரை 3-0 என இழந்தோம். முழு அணியும் ஏமாற்றமடைந்தது, நாங்கள் அதை உந்துதலாக எடுத்துக் கொண்டோம். அதேபோல், 1997க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக தொடரை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இலங்கை அணியின் பிளேயிங் லெவானின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் (இந்தியா) பொதுவாக இந்தியாவில் நல்ல விக்கெட்டுகள் மற்றும் சிறிய எல்லைகளில் விளையாடுவார்கள்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஆனால் கொழும்பு மைதானத்தில் விளையாடும் போது கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருந்தால் அதை எங்களால் பயன்படுத்த முடியும் என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் எங்களிடம் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். உள்ளூர் கிரிக்கெட்டிலும் இதுபோன்ற ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு தெரியும். வெல்லாலகே புத்திசாலித்தனமாக இருந்தார், வான்டர்சே சிறப்பாக செயல்பட்டார். மேலும் ஹசரங்கா, அகிலா மற்றும் நான் உள்பட அனைவரும் சிறப்பாக செயலப்ட்டோம். அனைத்து வீரர்களும் பங்களித்ததால், நாங்கள் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றோம்” என்று தெரிவித்துள்ளார்.