'மும்பை இந்தியன்ஸ வின் பண்ண முடியாதா? நாங்களும் சண்ட செய்வோம்' - சவால் விடுக்கும் அஸ்வின்
உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இன்று சென்னையில் தொடங்குகிறது. தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை, ஆர்சிபி அணி எதிர்கொள்கிறது .
முதல் ஆட்டமே ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளதால் நிச்சயம் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இந்தமுறையும் பட்டம் வெல்ல எந்தவிதத்திலும் குறைந்ததாக இல்லை. அதேநேரம் மும்பை அணிக்கு சவால் விடும் வகையில் டெல்லி கேபிடல்ஸ், சிஎஸ்கே, கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவும் இயலாது.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திர அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மும்பை இந்தியன்ஸ் அணியை என்ன வெல்லவே முடியாதா? நாங்களும் அதிரடியான மற்றும் அனுபவ வீரர்களை வைத்துள்ளோம். நாங்களும் கோப்பையை வெல்லத் தகுதியானவர்களே என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அஸ்வின், “டெல்லி கேபிடல்ஸ் அணி இளம் வீரர் ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குவதால் ஆர்வத்துடன் இருக்கிறோம். இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி வலுவானதாக இருந்தாலும், வீழ்த்த முடியாத அணி ஒன்றும் இல்லை. ஒவ்வொரு அணியும் வலுவாகத்தான் இருக்கிறார்கள். நான் சாதுர்யமாகப் பேசவில்லை. மும்பை அணி உண்மையில் வலிமையான அணிதான், அனுபவமான வீரர்களைக் கொண்டிருக்கிறது.
தங்களின் முதல் போட்டியைக் கூட மும்பை அணி வெற்றியுடன் தொடங்கலாம். ஆனால், அதேசமயம், மும்பை அணி வெல்ல முடியாத அணி ஒன்றும் அல்ல. இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவான அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். அதிலும் கேப்டன் ரிஷப்பந்த் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார் என்பதால், பட்டம் வெல்ல வாய்ப்பு அதிகம்” என்று தெரிவித்துள்ளார்.