கேகேஆர் அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய ஷாருக் கான் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Apr 17 2024 16:22 IST
கேகேஆர் அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய ஷாருக் கான் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்தது. இதில் அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் 30 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் 56 பந்துகளை சந்தித்த நரைன் 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி க்ளமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ரியான் பாராக்கும் 34 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராரான ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடியதுடன் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மேலும் இப்போட்டியில் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டி முடிந்த பின் கேகேஆர் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாரூக் கான் வீரர்களின் உடைமாற்று அறைக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், “நாம் தோல்வியடைவதற்கு தகுதியற்றவர்கள். ஆனால் இது கடவுளின் திட்டம் போல் தெரிகிறது. வெற்றி மற்றும் தோல்விகள் விளையாட்டின் ஒரு பகுதியாகும், அதனால் அணி வீரர்கள் அனைவரும் அடுத்து வரும் போட்டிக்காக தயாராவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த போட்டியில் நமது வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். நம்மை நினைத்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். இந்த தோல்விக்காக நாம் சோகமடைய தேவையில்லை. எனவே நீங்கள் வழக்கம் போல் உங்களுடைய போட்டியில் கவனத்தை செலுத்துங்கள்.  குறிப்பாக கவுதம் கம்பீர், சோகமாக இருக்காதீர்கள். இது கடவுளின் திட்டம். அதனால் அடுத்த போட்டியில் நிச்சயம் சிறப்பாக கம்பேக் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இக்காணொளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை