இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் - டிரென்ட் போல்ட் ஓபன் டாக்!

Updated: Sat, Jun 15 2024 21:04 IST
Image Source: Google

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த உகாண்டா அணியானது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு இடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியானது 5.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இருப்பினும் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளைப் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் இன்றைய லீக் போட்டியின் முடிவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் தனது ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “என்னை குறித்து பேசினால், இதுதான் நான் விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை தொடர். அதனால் நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான். டி20 கிரிக்கெட்டில் எதுவும் நடக்கும். நாங்கள் இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கும் முன்னேற முடியாமல் போனது விரக்தியளிக்கிறது. இத்தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டோம்.  

 

நல்ல காரணத்திற்காக நாங்கள் தகுதி பெறவில்லை, அது துரதிர்ஷ்டவசமானது ஆனால் டி20 கிரிக்கெட் இப்படித்தான் செல்கிறது. டிம் சௌதீயுடன் இணைந்து அதிக ஓவர்களை வீசியது மறக்க முடியாத நினைவாக இருக்கும். எங்களது பார்ட்னர்ஷிப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், ஏனெனில் நாங்கள் களத்திலும், வெளியேயும் சிறந்த நண்பர்கள். எங்கள் அணியில் திறன் படைத்த வீரர்கள் பலர் உள்ளனர். இந்த தொடர் நாங்கள் எண்ணியபடி செல்லவில்லை. இருந்தாலும் ஒரு தேசிய அணியாக எங்கள் அணியை எண்ணி பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை