'அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என நினைத்தேன்' - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Sat, Nov 27 2021 14:45 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் விளையாடியதையடுத்து, டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை ஸ்ரேயஸ் ஐயர் நிறைவேற்றியுள்ளார். 

முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த இந்தியர்களின் பட்டியலிலும் ஸ்ரேயாஸ் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல், இந்திய அணி தடுமாறிய நிலையில், ஷிரேயஸ் பொறுமையாக தனது ஆட்டத்தை தொடங்கினார்.

பின்னர், வேகமாக ரன்கள் எடுத்த அவர், போட்டியின் இரண்டாம் நாளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 13 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் விளாசிய அவர், 105 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார்.

இரண்டாம் நாள் முடிவில், சூர்யகுமார் யாதவுடனான உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, தனது முதல் ரஞ்சி போட்டியை இதே மைதானத்தில் விளையாடியதாக நினைவுகூர்ந்த அவர், தொடக்க காலத்தில் தனக்கு ஆதரவளித்த சூர்யகுமார் யாதவுக்கு நன்றி தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய அவர், "டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது எப்போதுமே எனது கனவாக இருந்தது. ஆனால், வாழ்க்கை வேறு வழியில் சென்றன. நான் டி20, ஒரு நாள் மற்றும் இப்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினேன். ஆனால், இது ஒருபோதும் தாமதமாகவில்லை, அறிமுக டெஸ்டில் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இதைவிட, வேறு எதுவும் எனக்கு சிறப்பாக நடந்திருக்காது. கான்பூர் மைதானம் எனக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டம். எனது முதல் ரஞ்சி சீசன் சூர்யகுமாரின் தலைமையின் கீழ் நடைபெற்றது. எனது முதல் நான்கு இன்னிங்ஸ்களுக்குப் பிறகு என்னை ஆதரித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில் நான் அணியிலிருந்து வெளியேற்றப்படுவேன் என்று நினைத்தேன்" என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை