நாங்கள் நினைத்ததை விட மைதானம் மெதுவாக இருந்தது - சாம் கரண்!

Updated: Sun, May 05 2024 20:53 IST
Image Source: Google

தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இனு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரவீந்திர் ஜடேஜா 43 ரன்களையும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ராகுல் சஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரூசோ என இருவரும் துஷார் தேஷ்பாண்டேவின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிட ஷஷாங் சிங் 27 ரன்களையும்,  பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 28 ரன்களில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண், “இன்றைய போட்டியில் நாங்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசினோம் என்று நினைத்தேன். ராகுல் சஹாரும், ஹர்ஷல் படேலும் தங்களுடைய அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணியை கட்டுப்படுத்தினர். முதல் இன்னிங்ஸின் முடிவில் நாங்கள் எதிரணியை குறைந்த இலக்கில் சுருட்டியதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களால் எந்த இலக்கை இன்று எட்டமுடியவில்லை. 

போட்டிக்கு முன்னதாக இந்த மைதானதில் வேகமும், பவுன்ஸும் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இந்த பிட்ச் நாங்கள் நினைத்ததை விட மிகவும் மெதுவாக இருந்தது. மேலும் அது இன்றைய போட்டி முழுவதும் மிகவும் மெதுவாக இருந்தது. இன்னும் சில தினங்களில் நாங்கள் ஆர்சிபி அணிக்கு எதிராக விளைடாடவுள்ளோம். அதனால் இத்தோல்வியிலிருந்து மீண்டு நாங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை