எல்லா புகழும் சூர்யகுமார் யாதவ்விற்கே - திலக் வர்மா!
தென் ஆப்பிரிகாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டின் செய்த இந்திய அணி திலக் வர்மாவின் சதத்தின் மூலமாகவும், அபிஷேக் சர்மாவின் அரைசதத்தின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 56 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 107 ரன்கள் எடுத்தார். அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் 50 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்கோ ஜான்சன் 17 பந்துகளில் 54 ரன்களையும், ஹென்ரிச் கிளாஸன் 22 பந்துகளில் 41 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டி20 தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி போட்டி நாளை (நவ.15) ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்தது குறித்து பேசிய திலக் வர்மா, “இப்போட்டியில் சதமடித்தது குறித்து என்னால் வார்த்தைகளில் விளக்க முடியாது. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது, அத்தகைய சூழலில் அணிக்கு தேவையான நேரத்தில் சதம் அடித்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் இதற்கான அனைத்து புகழும் எங்கள் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு தான் செல்ல வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
ஏனெனில் அவர் தான் எனக்கு 3ஆம் வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பளித்தார், மேலும் என்னை வெளிப்படுத்தச் சொன்னார். அவருக்கு மீண்டும் நன்றி. இப்போட்டியில் நான் எனது ஷாட் தேர்வில் கவனம் செலுத்தினேன். முதலில் இங்கு பேட்டிங் செய்யும் போது பிட்ச் இருவேறு விதமாக செயல்பட்டதால் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. ஆனால் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன், நீண்ட நேரம் பேட்டிங் செய்ததன் மூலம் இது சாத்தியமானது” என்று தெரிவித்துள்ளார்.