டி20 தரவரிசை: திலக் வர்மா அசுர வளர்ச்சி; முதலிடத்தை தக்கவைத்த சூர்யா!
இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி மூன்றாவது போட்டியில் சுதாரித்து வெற்றி பெற்று தொடரில் நீடிக்கிறது. இந்திய அணியின் நடப்பு டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக இடம்பெற்ற, பெறுகின்ற இஷான் கிஷான் மற்றும் எதிர்பார்த்த அளவிற்கு அவர்களது வழக்கமான தரத்தில் இல்லை.
இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் இசான் கிஷான் நீக்கப்பட்டு ஜெய்ஸ்வாலுக்கு முதல்முறையாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு தரப்பட்டது. மேலும் இந்தத் தொடரில் முதல் போட்டியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் 20 வயதான ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய அணி தோற்ற இரு ஆட்டங்களிலும் இவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் 39 மற்றும் 51 ரன்கள் எடுத்தார். தன்னுடைய சர்வதேச முதல் அரைசதத்தை தன் பெயரில் பதிவு செய்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று அணியில் வெற்றியை உறுதி செய்து 49 ரன்கள் எடுத்தார்.
இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் இருந்து தொடர்ந்து 30 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். திலக் வர்மாவின் மிகச் சிறப்பான பேட்டிங் காரணமாக அவர் டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 21 இடங்கள் உயர்ந்து, 67 வது இடத்தில் இருந்து 46 ஆவது இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறார். இந்த தொடரில் மேலும் அவர் சிறப்பாக செயல்பட பட அவர் உயரம் அதிகரிக்கலாம்.
அதேபோல் மூன்றாவது போட்டியில் 44 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் குவித்த சூரியகுமார் யாதவ் தொடர்ந்து தனது முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அவருக்கும் இரண்டாம் இடத்திற்கும் இருக்கின்ற தொலைவு மிகப்பெரியதாக இருக்கின்றது. முதல் 10 இடத்தில் இவரைத் தவிர வேறெந்த இந்தியர்களும் இல்லை என்பது கவலைக்குரியது.