திலக் வர்மா உலகக்கோப்பையில் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!

Updated: Fri, Aug 11 2023 15:56 IST
Image Source: Google

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு முழுவதுமாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது, நவம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. ஆஃப்கானிஸ்தான் போன்ற சிறிய அணிகள் கூட இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு, தற்போது தயார் நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.

ஆனால் உலகக் கோப்பையை நடத்தும் பெரிய அணியான இந்திய கிரிக்கெட் அணி இன்னும் உலகக்கோப்பையை எதிர்கொள்ள ஒரு முழுமையான அணியாக தயாராகவில்லை என்பதுதான் உண்மை. 11 பேர் கொண்ட விளையாடும் இந்திய அணியில் இடம்பெறக்கூடிய வகையில் இருந்த நான்கு வீரர்களுக்கு மேல் தற்பொழுது காயமடைந்து இருப்பது, இந்திய அணி நிர்வாகத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.

இதன் காரணமாக முடிவுகள் எட்டப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. இது ஒருபுறம் என்றால், இன்னொரு புறத்தில் திடீரென சில இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட யாருக்கு வாய்ப்பு தருவது? என்பது புதிய குழப்பத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் 20 வயதான இளம் இடதுகை பேட்ஸ்மேன் திலக் வர்மா உலகக் கோப்பை இந்திய அணியில் நான்காவது இடத்திற்கான நல்ல வீரராக இருப்பார் என்று தெரிகிறது. ஆனால் அவருடைய வயது மற்றும் அனுபவத்தைக் கொண்டு பார்த்தால் வாய்ப்பு தருவதற்கு நெருடலாகவும் இருக்கிறது. தற்போது இப்படியான சூழ்நிலை தான் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் நிலவுகிறது!

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு இருக்குமா என்று கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்ட பொழுது ” திலக் நல்ல வீரராக உறுதியாக தெரிகிறார். நான் அவரை இரண்டு வருடங்களாக பார்த்து வருகிறேன். அவருக்கு கிரிக்கெட்டில் நல்ல பசி இருக்கிறது. இதுதான் அவரது விஷயத்தில் மிக முக்கியமான ஒன்று.

நான் அவரைப் பார்த்து வந்ததில், அவருக்கு கிரிக்கெட்டில் அவருடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சி இருக்கிறது. அவருக்கு தன்னுடைய பேட்டிங் எப்படி என்று தெரிகிறது. நான் அவருடன் உரையாடியதில் இருந்து, அவருக்கு எந்த அளவு பேட்டிங் தெரிந்திருக்கிறது? எந்த நேரத்தில் அடிக்க வேண்டும்? எந்த இடங்களில் அடிக்க வேண்டும்? என்று அவர் புரிந்து இருப்பதை நான் புரிந்து கொண்டேன்.

அவரைப் பற்றி நான் சொல்வதற்கு இருப்பது இவ்வளவுதான். உலக கோப்பை அதற்கான வாய்ப்பு என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் நிச்சயமாக அந்தப் பையன் திறமையானவர். அவர் இந்தியாவுக்காக விளையாடிய சில ஆட்டங்களில் அதை நிரூபித்து காட்டியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை