டிஎன்பிஎல் 2021 : மதுரையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அந்த அணியில் கேப்டன் சதுர்வேத் அரைசதம் கடந்து அசத்த, மற்றவர்கள் சரிவர சோபிக்காகததால் 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக சதுர்வேத் 70 ரன்களைச் சேர்த்தார். சேப்பாக் அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜெகதீசன், ஸ்ரீநிவாஸ், சசிதேவ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் தொடர்ந்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கௌசிக் காந்தி அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம் 18.5 ஓவர்களிலேயே சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியையும் வீழ்த்தியது. மேலும் நடப்பு சீசனில் ஹாட்ரிக் வெற்றியைம் சூப்பர் கில்லீஸ் அணி பெற்றுள்ளது.