டிஎன்பிஎல் 2021: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் சந்தீப் வாரியர்!
ஐபிஎல் போட்டிகளைப் போலவே ஒவ்வொரு மாநிலங்களும் ஊள்ளூர் அணிகளை வைத்து டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றன. அதில் மிகவும் பிரபலமானது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடர். இதுவரை நான்கு சீசன்களைக் கடந்துள்ள இத்தொடரின் ஐந்தாவது சீசன் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்தாண்டு நடைபெற வேண்டிய இத்தொடர், வருகிற ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து இத்தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் வீரர்களைத் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர், விக்கெட் கீப்பர் நிலேஷ் சுப்பிரமணியம், ஆல்ரவுண்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை தேர்வு செய்துள்ளது.
இந்த சீசனில் கேரளா அணியில் இருந்து தமிழ்நாடு அணிக்கு இடம் மாறிய சந்தீப் வாரியரை தேர்வு செய்ததன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் பந்து வீச்சு தாக்குதல் மேலும் வலுவடையும் என்று அந்த அணியின் கேப்டன் கவுசிக் காந்தி தெரிவித்துள்ளார்.
சந்தீப் வாரியர் தற்போது இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பவுலராக இருப்பதும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடுவதும் குறிப்பிடத்தக்கது.