கரோனா அச்சுறுத்தலால் டிஎன்பிஎல் தொடர் ஒத்திவைப்பு!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் தமிழ்நாடு பிரீமியர் லீக் பக்கம் திரும்பியுள்ளது.
தமிழ்நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட், 4 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான சீசன் ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதன்பின் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் என அடுத்தடுத்து தொடர்கள் நடைபெற்றதால் இத்தொடர் இதுநாள் வரை நடத்தப்படவில்லை.
இதையடுத்து இந்தாண்டு தொடருக்கான அட்டவணை கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது. அதன்படி வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் டிஎன்பிஎல் தொடரை தொடங்கி ஜூலை 4ஆம் தேதி வரை போட்டிகள் நடத்தப்படும் என கூறப்பட்டது.
இதற்கிடையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் மே.7ஆம் தேதி ஏலம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சேலம், கோவை மைதாங்களில் முதல் முறையாக டி.என்.பி.எல் போட்டிகள் நடத்த தயார் செய்யப்பட்டன.
இந்நிலையில் கரோனா காரணமாக இந்தாண்டுக்கான டிஎன்பிஎல் தொடரையும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய டிஎன்பிஎல் தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன்,“தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில் டிஎன்பிஎல் தொடரை நடத்துவது இயலாத ஒன்று. எனவே தளர்வுகள் அறிவிக்கப்படும் வரை டிஎன்பிஎல் போட்டி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
மேலும் நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம். மாநில அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அதன்பிறகு போட்டிகளை நடத்துவது குறித்து முடிவெடுப்போம். எனவே ஊரடங்கு தளர்வுகள் தெரிந்தவுடன் அடுத்த போட்டி அட்டவணை விவரங்களை வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.