டிஎன்பிஎல் 2021: மதுரையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெற்ற கோவை!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச திர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை அணி ஷாருக் கான், சாய் சுதர்சன் ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. இதில் சாய் சுதர்சன் 61 ரன்களையும், ஷாருக் கான் 58 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய மதுரை பாந்தர்ஸ் அணி எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. கோவை அணி தரப்பில் அஜித் ராம், திவாகர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி, நடப்பு சீசனில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.