டிஎன்பிஎல் 2022: ஷாருக் கான் அபாரம்; கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸும் லைகா கோவை கிங்ஸும் ஆடிவருகின்றன.
சேலத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லைகா அணியின் தொடக்க வீரர்கள் சுரேஷ் குமார் - ஸ்ரீதர் ராஜு ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். ஸ்ரீதர் ராஜு 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். மற்றொரு தொடக்க வீரரான சுரேஷ் குமார் அரைசதம் அடித்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய சாய் சுதர்ஷன் 18 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்தார்.
அதிரடியாக ஆடிய சுரேஷ் குமார் 48 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவிக்க, லைகா கோவை கின்ங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணியின் தொடக்க வீரர் ஸ்ரீ நெரஞ்சன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜெயர்பிராகாஷ் - பாபா அபாரஜித் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெயபிரகாஷ் 45 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 37 ரன்கள் சேர்த்திருந்த பாபா அபாரஜித்தும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் இந்திரஜித் 5, ஜித்தேஷ் 17 ரன்கள் என விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சஞ்சய் யாதவ் 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இறுதியில் சஞ்சய் யாதவும் 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்க் 172 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. கோவை அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய கேப்டன் ஷாருக் கான் 3 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.