டிஎன்பிஎல் 2022: ‘திக் திக்’ கடைசி நிமிடம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லைகா கோவை கிங்ஸ்!

Updated: Fri, Jul 29 2022 23:13 IST
Image Source: Google

ஆறாவது சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் கோவையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2ஆவது தகுதி சுற்றில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸும் மோதின.

லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நெல்லை அணி முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் வந்ததால் அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீ நிரஞ்சனும், சூரியபிரகாஷும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

ஸ்ரீ நிரஞ்சன் 34 ரன்களும், சூரியபிரகாஷ் 25 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாபா அபராஜித் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த சஞ்சய் யாதவ் 26 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் அஜிதேஷ் அதிரடி காட்டி 38 ரன்கள் எடுக்க, நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய கோவை அணிக்கு கங்கா ஸ்ரீதர் ராஜூ - சுரேஷ் குமார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஸ்ரீதர் ராஜூ 28 ரன்களிலும், சுரேஷ் குமார் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷிதித்தும் 3 ரன்களில் நடையைக் கட்டினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷ்சன் - ஷாருக் கான் இணை அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் அரைசதம் அடித்த கையோடு 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் இறுதிவரை மனம் தளராமல் விளையாடிய ஷாருக் கான் கடைசி வரை களத்தில் இருந்து அரைசதம் கடந்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றதுடன், நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதனைப் படைத்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக் கான் 24 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 58 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை