டிஎன்பிஎல் 2022: சஞ்சய் யாதவ் அதிவேக அரைசதம்; நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் தாமதமானது. திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸுக்கு இடையேயான போட்டி மழையால் தாமதமானது.
தாமதமாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் தாமதமானதால் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள், 12 ஓவர் போட்டி என்பதால் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தனர். தொடக்க வீரர்கள் விஷால் வைத்யா - ஹரி நிஷாந்த் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 82 ரன்களை குவித்தனர். ஹரி நிஷாந்த் 27 பந்தில் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான விஷால் வைத்யா 21 பந்தில்45 ரன்களை விளாசினார். அதன்பின்னர் விவேக், பிரதீப், மோனிஷ் ஆகியோரின் பங்களிப்பால் 12 ஓவரில் 130 ரன்களை குவித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 131 ரன்கள் என்ற கடின இலக்கை நெல்லை ராயல் கிங்ஸுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து 12 ஓவரில் 131 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சூர்யபிரகாஷ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான நிரஞ்சன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 4.3 ஓவரில் 34 ரன்களுக்கு நெல்லை அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
அதன்பின்னர் சஞ்சய் யாதவும் பாபா அபரஜித்தும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். வெறும் 15 பந்தில் அரைசதம் அடித்து, இந்த சீசனின் அதிவேக அரைசதம் என்ற சாதனையை படைத்த சஞ்சய் யாதவ், டிஎன்பிஎல்லின் அதிவேக அரைசதம் என்ற சாதனையை பகிர்ந்துள்ளார்.
சஞ்சய் யாதவ் 19 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 55 ரன்களையும், பாபா அபரஜித் 30 பந்தில் 59 ரன்களையும் விளாச, 11 ஓவரிலேயே 131 ரன்கள் என்ற இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.