ஒரே பந்திற்கு இரண்டு ரிவியூக்கள்; நடுவருக்கு அதிர்ச்சி கொடுத்த அஸ்வின்!
தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கோலாகலமாக தொடங்கியுள்ள ஏழாவது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் திருச்சியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் இத்தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருச்சி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு திண்டுக்கல் அணியின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 19.1 ஓவரிலேயே 120 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு 4 பவுண்டரி 2 சிக்சருடன் 48, ரன்களும் ராஜ்குமார் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 39 ரன்களும் எடுக்க திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், சரவணகுமார் மற்றும் சுபோத் பாத்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதன்பின் எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு தொடக்க வீரர் ஷிவம் சிங் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 46 ரன்களும், பாபா இந்திரஜித் 22 ரன்களும் ஆதித்யா கணேஷ் 20 ரன்களும் எடுத்து 14.5 ஓவரிலையே வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு குறைவான இலக்கை மட்டுமே நிர்ணயித்த திருச்சி அணிக்கு நடராஜன், சிலம்பரசன், அலெக்ஸாண்டர் மற்றும் ஆன்டணி தாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தும் வெற்றிக்கான முடியவில்லை.
முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறாத ரவிச்சந்திரன் அஸ்வின் லண்டனிலிருந்து தாயகம் திரும்பியதும் நேராக ஓய்வெடுக்காமல் இத்தொடரில் திண்டுக்கல் அணியின் கேப்டனாக செயல்பட்டு முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து தன்னை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்து வெற்றியில் பங்காற்றினார்.
அதை விட 13ஆவது ஓவரில் அவர் வீசிய பந்தை எதிர்கொண்ட ராஜ்குமார் பவுண்டரி அடிக்க முயற்சித்து தவற விட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். அந்த சமயத்தில் பேட்டில் பட்டது போல் தெளிவான சத்தம் கேட்டதால் களத்தில் இருந்த நடுவரும் அவுட் கொடுத்தார். இருப்பினும் அதை ஏற்காத ராஜ்குமார் டிஆர்எஸ் ரிவியூ எடுத்ததை தொடர்ந்து 3ஆவது நடுவர் சோதித்த போது அல்ட்ரா எட்ஜ் தொழிநுட்பத்தில் பந்து தொடுவது போல் சென்றத்துடன் பேட்டை கடக்கும் போது ஸ்பைக்கை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த சமயத்தில் பேட் தரையில் உரசியதை கவனித்த 3ஆவது நடுவர் பந்து துளியளவு கூட பேட்டில் படாமல் சென்றதை உறுதி செய்து களத்தில் இருந்த நடுவர் கொடுத்த முடிவை மாற்றி அறிவித்தார். இருப்பினும் திண்டுக்கல் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் தமக்கு இந்த முடிவில் திருப்தியில்லை மீண்டும் ரிவியூ எடுங்கள் என களத்தில் இருந்த நடுவரிடம் கேட்டுக் கொண்டார். அதாவது களத்தில் இருக்கும் நடுவர்கள் கொடுத்த ஒய்ட் போன்ற தீர்ப்புகளில் கூட திருப்தி இல்லையெனில் மீண்டும் ரிவியூ எடுக்கலாம், இம்பேக்ட் பிளேயர் போன்ற ஐபிஎல் 2023 தொடரில் பின்பற்றப்பட்ட புதிய விதிமுறைகள் இந்த தொடரிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதை பயன்படுத்திய அஸ்வின் ரிவியூவை மீண்டும் ரிவியூ எடுத்தார். அதன் காரணமாக 3ஆவது நடுவர் ஒவ்வொரு ஃபிரேமாக சோதித்த போதிலும் பேட்டில் கொஞ்சம் கூட பந்து உரசாத காரணத்தால் அவுட்டில்லை என்ற தீர்ப்பை மீண்டும் கொடுக்குமாறு களத்தில் இருந்த நடுவரிடம் கேட்டுக் கொண்டார். குறிப்பாக மன்கட் அவுட் அதிகாரப்பூர்வமாக எம்சிசி ரன் அவுட்டாக அறிவிக்கும் அளவுக்கு கிரிக்கெட்டின் விதிமுறைகளை ஆழமாக பேசக்கூடிய அஸ்வின் என்னையவே ஏமாற்ற பார்க்கிறீங்களா என்ற வகையில் அந்த சமயத்தில் நடந்து கொண்டது ரசிகர்களிடம் கலகலப்பை ஏற்படுத்தியது.