டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்படி ஜாஃபர் ஜமால்,ஸ்ரீனிவான், ஃபெர்ராரியோ, மணி பாரதி, ஷாஜகான், அந்தோனி தாஸ் என அடுத்தடுத்து ஒற்றையிழக்க ரன்களோடு பெவிலியன் திருபினர்.
அதன்பின் கங்கா ஸ்ரீதர் ராஜுவுடன் இணைந்த ராஜ்குமார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கங்கா ஸ்ரீதர் ராஜூ 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து 2 ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராஜ்குமாரும் 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களால் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், சரவண குமார் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர் விமல் குமார் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிவம் சிங்- பாபா இந்திரஜித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுவம் சிங் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து இந்திரஜித் 22 ரன்களிலும், சரத் குமார் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆதித்யா கனேஷ் 20 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 14.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.