டிஎன்பிஎல் 2023: ஸ்பார்ட்டன்ஸை பந்தாடியது கோவை கிங்ஸ்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் - சுரேஷ் குமார் இணை களமிறங்கினர். இதில் சுரேஷ் குமார் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் சுஜயுடன் இனைந்த சாய் சுதர்சன் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்களில் சுஜயும், 41 ரன்களில் சாய் சுதர்சனும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஆதிக் உர் ரஹ்மான் அதிரடியாக விளையாடி 31 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான், முகமது ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராம் அரவிந்த் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி அரைசதம் கடந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைக் குவித்தது. சேலம் அணி தரப்பில் சன்னி சந்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி இப்போட்டியிலும் பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பியது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அமித் சாத்விக் ரன்கள் ஏதுமின்றியும், மொஹித் ஹரிஹரன் 7 ரன்களிலும், கௌசிக் காந்தி 4 ரன்களிலும், மான் பாஃப்னா 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய அபிஷேக், சன்னி சந்து, முகமது அத்னான் கான், கேப்டன் அபிஷேக் தன்வர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களில் ஆல் அவுட்டாகியது.
லைகா கோவை கிங்ஸ் அணி தரப்பில் தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.