டிஎன்பில் 2023: சேப்பாக்கை 126 ரன்களில் சுருட்டியது கோவை!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஜெகதீஷன் - பிரதொஷ் பால் இணை களமிறங்கினர். இதில் ஜெகதீஷன் 4 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சந்தோஷ் ஷிவ் 14 ரன்களுக்கும், பிரதோஷ் பால் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, நட்சத்திர வீரர் பாபா இந்திரஜித்தும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சய் யாதவும் 2 ரன்களில் ஆட்டமிழக்க 61 ரன்களிலேயே சேப்பாக் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சசிதேவ் - ஹரிஷ் குமார் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
பின் 23 ரன்களில் சசிதேவும், 32 ரன்களில் ஹரிஷ் குமாரும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பேட்டர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. கோவை அணி தரப்பில் தாமரை கண்ணன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.