டிஎன்பிஎல் 2023: சதமடித்து நெல்லைக்கு வெற்றியைத் தேடித்தந்த அருண் கார்த்திக்!

Updated: Sat, Jun 24 2023 19:29 IST
TNPL 2023: Nellai Royal Kings cruise to victory with Arun Karthick's brilliant century! (Image Source: Google)

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 6 சீசன்களை கடந்து தற்போது 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரதோஷ் பால் 2 ரன்களிலும், நாராயண் ஜெகதீசன் 15 ரன்களுக்கும், சஞ்சய் யாதவ் 15 ரன்களுக்கும், லோகேஷ் ராய் ஒரு ரன்னிலும் என வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். 

இதில் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் அரைசதத்தையும் பதிவுசெய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபாரஜித் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 79 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும், லக்‌ஷய் ஜெய்ன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணிக்கு அருண் கார்த்திக் - நெரஞ்சன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் நெரஞ்சன் 24 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியில் மிரட்டிய அருண் கார்த்திக் அரைசதம் கடந்தார். 

அதன்பின் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும் தனது அதிரடியைக் கைவிடாத அருன் கார்த்திக் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்ததுடன் தனது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியில் 10 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 104 ரன்களை குவித்த அருண் கார்த்திக் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை