டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர்1: சச்சின் அதிரடி; திண்டுக்கல்லுக்கு 194 டார்கெட்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய சுரேஷ் குமார் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சுஜய் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த சச்சின் மற்றும் முகிலேஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய இருவரும் எதிரணி பந்துவீச்சாளர்களை பந்தாடினர். இதில் அபார் ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகிலேஷ் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் என 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 70 ரன்களை எடுத்திருந்த சச்சினும் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கானும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் அணி தரப்பில் சுபோத் பாடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.