டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர்1: திண்டுகல்லை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது கோவை கிங்ஸ்!

Updated: Fri, Jul 07 2023 23:00 IST
TNPL 2023 Qualifier1 : Lyca Kovai Kings are through to the final! (Image Source: Google)

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய கோவை அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய சுரேஷ் குமார் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சுஜய் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த சச்சின் மற்றும் முகிலேஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய இருவரும் எதிரணி பந்துவீச்சாளர்களை பந்தாடினர். இதில் அபார் ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகிலேஷ் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் என 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 70 ரன்களை எடுத்திருந்த சச்சினும் விக்கெட்டை இழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கானும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் அணி தரப்பில் சுபோத் பாடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் விமல் குமார் ஒரு ரன்னிலும், ஷிவம் சிங் 10 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பூபதி குமார் 25 ரன்களிலும், கேப்டன் பாபா இந்திரஜித் 21 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய அதித்தியா கணேஷ், கிஷூர், சுபோத் பாடி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய சரத் குமார் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்காக போராடினார். பின் 26 பந்துகளில் 8 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் சரத் குமாரும் விக்கெட்டை இழந்தார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை மட்டுமே எடுத்தது, கோவை அணி தரப்பில் முகமது 3 விக்கெட்டுகளையும், தாமரை கண்ணன், யுதீஷ்வரன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை