டிஎன்பிஎல் 2023: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி சேலம் ஸ்பார்ட்டன்ஸ் த்ரில் வெற்றி!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடகக் வீரர்கள் கௌசிக் காந்தி ரன்கள் ஏதுமின்றியும், அரவிந்த் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கவினும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து களமிறங்கிய சன்னி சந்து அதிரடியாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் அதிரடியை கைவிடாத சன்னி சந்து அரைசதம் கடந்து அசத்தினார்.
பின் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 61 ரன்கள் எடுத்திருந்த சன்னி சந்துவும் விக்கெட்டை இழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடுவில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திருப்பூர் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வரன் 3 விக்கெட்டுகளையும், நக், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணியில் ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ராதாகிருஷ்ணன் 16 ரன்களிலும், துஷார் ரஹேஜா 22 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சாய் கிஷோர் 26 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர், பாலச்சந்தர், கேப்டன் சதுர்வேத், விவேக் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 147 ரன்களை மட்டுமே எடுத்தது.
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி தரப்பில் சச்சின் ரதி, செல்வ குமரன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது,