தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சந்தோஷ் குமார் - ஜெகதீசன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்திருந்த ஜெகதீசன் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் சந்தோஷ் குமாரும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் பாபா இந்திரஜித் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஃபெராரீயோ - பிரதோஷ் பால் ஆகியோரும் அதிரடியாக விளையாட சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் 30 ரன்களில் ஃபெராரீயோ தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரதோஷ் பால் 29 ரன்களையும், அபிஷேக் தன்வர் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைக் குவித்தது. திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி தரப்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கிராண்ட் சோழாஸ் அணிக்கு வசீம் அஹ்மத் - ராஜ்குமார் இணை தொடக்கம் கொடுத்தனர்.
பின்னர் 14 ரன்கள் எடுத்த நிலையில் ராஜ்குமார் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷயாம் சுந்தர் 9 ரன்களுக்கும், சஞ்சய் யாதவ் ஒரு ரன்னிலும், அர்ஜுன் மூர்த்தி 5 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வசீம் அஹ்மத் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஜாஃபர் ஜமால் - ராஜ்குமார் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் ராஜ்குமார் 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜாஃபர் ஜமால் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்தார். ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை மட்டுமே சேர்த்தது. சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.