தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு சந்தோஷ் குமார் - ஜெகதீசன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் 10 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தோஷ் குமாரும் ஆட்டமிழந்தார்.

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் 15 ரன்களுக்கும், ஆண்ட்ரே சித்தார்த் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கி அதிரடியாக விளையாடிய டேரில் ஃபெராரியோ 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா அபாரஜித் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய அஸ்வின் கிரிஸ்டும் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபிஷேக் தன்வர் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன் 26 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கையும் கொடுத்தார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களைச் சேர்த்தது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணி தரப்பில் சன்னி சந்து, பொய்யாமொழி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு அபிஷேக் மற்றும் கவின் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ரன்களைச் சேர்க்க தடுமாறிய நிலையில் பவர்ஃபிளே ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்ததுடன் வெறும் 22 ரன்கலை மட்டுமே எடுத்தது. அதன்படி அணியின் தொடக்க வீரர் அபிஷேக் 7 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜேந்திரன் விவேக்கும் 9 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான  கவினும் 15 ரன்கள் எடுத்த நிலையில் அட்டமிழக்க, சேலம் அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ராபின் பிஸ்ட் மற்றும் முஹ்மத் அதான் கான் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதான் கானும் விக்கெட்டை இழந்தார். 

இதனால் கடைசி இரண்டு ஓவர்களுக்கு சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் சிறப்பாக விளையாடிய ராபின் பிஸ்டும் 36 ரன்களில் விக்கெட்டை இழக்க அணியின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் ஹரிஷ் குமார் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்த நிலையிலும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News