தமிழ்நாடு பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று சேலத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த நீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சுஜய் 6 ரன்களிலும், சுரேஷ் குமார் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷாருக் கானும் 8 ரன்களில் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். இதன்மூலம் கோவை கிங்ஸ் அணியானது 24 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த பாலசுப்ரமணியம் சச்சின் - முகிலேஷ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் முகிலேஷ் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராம் அரவிந்த் 12 ரன்களிலும், ஆதீக் உர் ரஹ்மான் 3 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் அதிரடியாக விளையாடிய பாலசுப்ரமணியன் சச்சின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைச் சேர்த்தது. சேப்பாக் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஜெகதீசன் - சந்தோஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சந்தோஷ் குமார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜெகதீசனுடன் இணைந்த கேப்டன் பாபா அபாரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அபாரஜித்துடன் இணைந்த பிரதோஷ் பாலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோரும் உயர்ந்தது. இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா அபாரஜித் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டெரில் ஃபெரிரோ 2 ரன்களுக்கும், ஜிதேந்திர குமார் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக சூப்பர் கில்லீஸ் அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்திருந்த பிரதோஷ் ரஞ்சன் பால் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலுயனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய அபிஷேக் தன்வர் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி அசத்தினார். இதன்மூலம் சூப்பர் கில்லீஸ் வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் கடைசி ஓவரை வீசிய முகமது அந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதன்மூலம் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு சீசன் டிஎன்பிஎல் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.