விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் லீக் போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்பார்டன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டிராகன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஷிவம் சிங் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் ஷிவம் சிங் 2 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வினும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த விமல் குமார் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விமல் குமார் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

Advertisement

அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த இந்திரஜித் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பூபதி குமாரும் 8 ரன்களிலும், சரத் குமார் 05 ரன்களிலும் என அடுத்தடுத்து நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கிஷூர் மற்றும் வருன் சக்ரவர்த்தி உள்ளிட்ட வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்துனர்.

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் ராஜ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 20 ரன்களைச் சேர்த்த நிலையில் கடைசி பந்தில் ரன் அவுட்டானார். இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சன்னி சந்து மற்றும் ஹரிஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேலம் ஸ்பார்டன்ஸ் அணி விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய அணிக்கு அபிஷேக் மற்றும் கவின் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 28 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் கவினுடன் இணைந்த ராஜெந்திரன் விவேக்கும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கவின் 8 பவுண்டரிகளுடன் 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விஷால் வைத்யாவும் 15 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜேந்திரன் விவேக் அரைசதம் கடந்துடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்த்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசன் டிஎன்பிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News