டிஎன்பிஎல் 2025: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
TNPL 2025 Final: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமித் சாத்விக் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சாய் கிஷோரும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார்.
அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 77 ரன்களைச் சேர்த்த கையோடு ரஹேஜா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 23 ரன்களில் முகமது அலியும், 20 ரன்னில் சசிதேவும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனோவங்கர் 25 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் கார்த்திக் சரண் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ரன்னிலும், பாபா இந்திரஜித் 9 ரன்னிலும், விமல் குமார் 10 ரன்னிலும், தினேஷ் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஹனி சன்னி அதிரடியாக விளையாடும் முயற்சியில் 17 ரன்னிலும், கார்த்திக் சரண் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 7 ரன்னிலும், அணியின் மற்றொரு தொடக்க வீரர் விட்கர் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் புவனேஷ்வர் 12 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 14.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களில் ஆல் அவுட்டானது. திருப்பூர் அணி தரப்பில் சிலம்பரசன், மோஹன் பிரசாத், எசக்கிமுத்து தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் டிஎன்பிஎல் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.