டிஎன்பிஎல் 2025: சசிதேவ், எசக்கிமுத்து அபாரம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திருப்பூர் தமிழன்ஸ்!

Updated: Tue, Jul 01 2025 23:15 IST
Image Source: Google

டிஎன்பிஎல் 2025: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி நடப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திண்டுக்கல்லில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், துஷார் ரஹேஜா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய சாய் கிஷோரும் அதிரடியாக விளையாட, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமித் சாத்விக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களில் சாத்விக் ஆட்டமிழக்க, 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 33 ரன்களைச் சேர்த்திருந்த சாய் கிஷோரும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் சசிதேவ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 6 பவுண்டரி, 3  சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர் ஆஷிக் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த மோஹித் ஹரிஹரன் - கேப்டன் பாபா அபாரஜித் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய பாபா அபாரஜித் 4 சிக்ஸர்களுடன் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் மோஹித் ஹரிஹரனும் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய விஜய் ஷங்கர் 14 ர்ன்னிலும், ஜெகதீசன் 2 ரன்னிலும், ஸ்வப்நில் சிங் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் சூப்பர் கில்லீஸ் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களில் ஆல் அவுட்டானது. திருப்பூர் அணி தரப்பில் எசக்கிமுத்து மற்றும் மதிவண்ணன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை