பந்துவீச்சில் எசக்கிமுத்து, பேட்டிங்கில் ரஹேஜா அசத்தல்; டிராகன்ஸை பந்தாடியது தமிழன்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது லீக் போட்டி இன்று நடைபெற்றது. கோவையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அஸ்வின் 18 ரன்களுக்கும், அதிரடியாக விளையாடி வந்த ஷிவம் சிங் 30 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் எசக்கிமுத்து மற்றும் மதிவண்ணன் அகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்கு முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதிலும் குறிப்பாக ஆர்கே ஜெயந்த் 18 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்டவில்லை. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களில் ஆல் அவுட்டானது. திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய எசக்கிமுத்து 4 விக்கெட்டுகளையும், மதிவண்ணன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், அமித் சாத்விக் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த துஷார் ரஹேஜா அரைசதம் கடந்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 11.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய எசக்கிமுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.