டிஎன்பிஎல் 2023: திண்டுக்கல்லுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெல்லை!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலபப்ரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நெல்லை அணிக்கு அருண் கார்த்திக் - ஸ்ரீ நெரஞ்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நெரஞ்சன் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராஜகோபால் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் அருண் கார்த்திக்கும் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய அஜித்தேஷ், ரித்திக் ஈஸ்வரன், சோனு யாதவ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹரிஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 34 ரன்களைச் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் அணி தரப்பில் சுபோத் பாடி, மதிவண்ணன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.