ஐபிஎல் 2022: ஏலத்தில் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் ஐந்து வீரர்கள்!

Updated: Fri, Feb 11 2022 12:25 IST
Top Five Players To Look Out For In The IPL 2022 Mega Auction (Image Source: Google)

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்காக ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். கடந்த 2018க்கு பின் முதல் முறையாக இந்த ஆண்டு மெகா அளவில் நடைபெற உள்ள இந்த ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

இந்த ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலை தொகையாக 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி, 50 லட்சம், 20 லட்சம் என 5 வகையான பிரிவுகளின் கீழ் அனைத்து வீரர்களும் பங்கேற்க உள்ளார்கள். அதில் தரமான வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் பல கோடி ரூபாய்களை செலவழிக்க தயாராக காத்திருக்கின்றன. ஐபிஎல் ஏலம் என்றாலே நட்சத்திர வீரர்கள் பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் போவது வாடிக்கையான ஒன்றாகும்.

அதிலும் 15 கோடிகளுக்கும் மேல் ஒப்பந்தம் செய்யப்பட்ட எத்தனையோ வீரர்கள் கோடிகளில் சாதனைகளைப் படைத்துள்ளதை பார்த்தோம். இருப்பினும் அந்த ஐபிஎல் சீசன் முடிந்த பின்னர் அவர்கள் வாங்கிய பல கோடி ரூபாய் சம்பளத்திற்காக சிறப்பாக செயல்பட்டார்களா என வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பார்த்தால் பெரும்பாலான சமயங்களில் அவர்கள் சுமாராகவே செயல்பட்டு உள்ளார்கள்.

ஆனால் அதே சமயம் மிக குறைந்த சம்பளத்திற்கு ஒப்பந்தமான எத்தனையோ வீரர்கள் பெரும்பாலான நேரங்களில் யாரும் எதிர்பாராத வண்ணம் மிகச் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்கள். அதன்படி நடப்பு ஐபிஎல் சீசனில்  அதிக தொகைக்கு ஏலம் போகும் ஐந்து வீரர்களின் பட்டியல் இதோனி.

இஷான் கிஷன்

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான இவர், கடந்த் சில வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றார்.

மேலும் அவரால் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட முடியும் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது அடிப்படை விளை ரூ.2 கோடி. இவர் ஐபில் தொடரில் இதுவரை 61 போட்டிகளில் விளையாடி 1452 ரன்களை விளாசியுள்ளார்.

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். இவர் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். 

ஆனாலும் டி20 உலகக்கோப்பை தொடரில் பல அபாரமான இன்னிங்ஸை விளையாடி ஆஸ்திரேலியா முதன்முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். 

ஐபிஎல் தொடரில் ரூ.2 கோடிக்கு பெயரை பதிவு செய்துள்ள டேவிட் வார்னர் பல கோடிகளை அள்ளுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த சில சீசன்களாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்திவந்தார். இந்நிலையில் கடந்த ஐபிஎல் சீசனின் போது காயம் காரணமாக விலக, கேப்டன் பதவியும் அவரை விட்டு விலகியது. 

அதன்காரணமாக டேல்லி கேப்பிட்டல்ஸ் அணியை விட்டு விலகிய ஸ்ரேயாஸ் ஐயர், நடப்பு ஐபிஎல் சீசனில் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் பங்கேற்றுள்ளார்.

பல அணிகள் கேப்டன்களுக்காக போட்டியில் ஈடுபடும் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயர் ஏதாவது ஒரு அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜேசன் ஹோல்டர் 

வெஸ்ட்இண்டீஸ் நட்சத்திரம் ஜேசன் ஹோல்டர் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான வெறும் 8 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். ஆனால் அந்த 8 போட்டிகளில் 85 ரன்களை அடித்த அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டார். இத்தனைக்கும் கடந்த வருடம் அவரின் சம்பளம் வெறும் 75 லட்சமாகும்.

மேலும் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஹாட்ரிக் உட்பட 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து மிகச்சிறப்பான பார்மில் உள்ளார். இருப்பினும் வரும் ஐபிஎல் 2022 ஏலத்தில் 1.5 கோடிகள் என்ற மிகக் குறைந்த விலையில் விண்ணப்பம் செய்துள்ள இவரை எவ்வளவு கோடிகள் கொடுத்து வேண்டுமானாலும் வாங்கலாம். ஏனெனில் இவர் 1.5 கோடிக்கும் மேலான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் தகுதியை கொண்டுள்ளார்.

தீபக் சஹார்

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார். பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தும் திறன் இவரிடம் உள்ளதால், நிச்சயம் இவருக்கான டிமெண்ட் அதிகரித்துள்ளது. 

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் தீபக் சஹாருக்காக கடுமையாக போட்டி போடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

இதுவரை 63 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தீபக் சஹார் 59 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை