மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்குவோம் - கேரி ஸ்டெட்!

Updated: Wed, Nov 24 2021 10:02 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் நடைபெறுகிறது. முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

அதே உத்வேகத்துடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இறங்கியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில்ல் தேவைப்பட்டால் 3 ஸ்பின்னர்களை கூட களமிறக்குவோம் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய ஆடுகளங்களில், 4 வேகப்பந்துவீச்சாளா்கள், 1 பகுதி நேர ஸ்பின்னரைக் கொண்டு விளையாடுவதென்பது இயலாத விஷயம். முதல் டெஸ்ட் நடைபெறும் கான்பூா் ஆடுகளத்தை பாா்வையிட்ட பிறகு, தேவையேற்பட்டால் 3 ஸ்பின்னா்களுடன் நாங்கள் களம் காணுவோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றே இருக்கும் சில கோட்பாடுகளில் மாற்றம் செய்யாமல், ஆட்டத்தில் அதைச் செயல்படுத்துவதில் மட்டும் மாற்றங்கள் செய்வோம். முதல் ஆட்டம் கான்பூரிலும், அடுத்த ஆட்டம் மும்பையிலும் நடைபெறுகிறது. இந்த ஆடுகள மாற்றத்துக்கு ஏற்றவாறு எங்களது அணியையும் அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து தொடருடன் ஒப்பிடுகையில் இந்தத் தொடா் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில், அதில் சென்னை மற்றும் ஆமதாபாதில் தலா 2 ஆட்டங்கள் நடைபெற்றன. அதனால், ஒரு ஆட்டத்தின் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த ஆட்டத்துக்காக அணியை எளிதாக தயாா்படுத்திக் கொள்ள முடியும். 

ஆனால் இந்தத் தொடரில் இரு ஆட்டங்களுமே வெவ்வேறு இடங்களில் நடைபெறுவது வேறு வகையான சவாலாக இருக்கும். இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவில் பிறந்த எங்களது அணி வீரா் அஜஸ் படேல் களம் காண வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை