இங்கிலாந்து அணி உள்ள நிலையில் இந்தியாவை வீழ்த்து இயலாது - மைக்கேல் வாகன்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்காக இங்கிலாந்து சென்றிருந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.
இதனால் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியால் இந்தியாவை வீழ்த்து இயலாது என அந்நாட்டின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தேரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி சில மாற்றங்களை செய்யத் தவறினால், அவர்களால் வெற்றிபெற இயலாது. ஏனெனில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை மிக மோசமான ஃபார்மில் உள்ளது.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணிலே இங்கிலாந்து அணி இழந்துள்ளது.
அதனால் இந்திய அணிக்கெதிரான தொடரில் டேவிட் மாலன், ஜோஸ் பட்லர் ஆகியோரை மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டியது அவசியம். அவர்கள் எந்த நேரமும் ஆட்டத்தை மாற்றும் திறன் பெற்றவர்கள். ஒருவேளை இந்த மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்யத் தவறினால், நிச்சயம் தொடரை இழக்கும்” என்று எச்சரித்துள்ளார்.