மகளிர் டி20 சேலஞ்ச்: தோற்றாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெலாசிட்டி!
மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெலாசிட்டி - டிரெயில்பிளேசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ர வெலாசிட்டி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டிரெயில்பிளேசர்ஸ் அணி மேஹனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக மேஹனா 77 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 66 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்தியதுடன், வெலாசிட்டி அணி 160 ரன்களை எட்டினால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய வெலாசிட்டி அணிக்கு ஷஃபாலி வர்மா - யஷ்திகா பாட்டியா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் யஷ்திகா பாட்டியா 19 ரன்களிலும், ஷஃபாலி வர்மா 29 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கிரண் நவ்கீரே சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு தனது அதிரடியைத் தொடங்கினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்த கிரண் நவ்கீரே 25 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இதன்மூலம் மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீராங்கனை எனும் ஷஃபாலி வர்மாவின் சாதனையை முறியடித்து கிரண் நவ்கீரே புதிய சாதனையைப் படைத்தார்.
அதன்பின் 69 ரன்களில் கிரண் நவ்கீரே ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் ரன் சேர்க்க தவறினர். இருந்தாலும் வெலாசிட்டி அணி இப்போட்டியில் 160 ரன்களைக் கடந்தது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் வெலாசிட்டி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டிரெயில்பிளேசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணியை வீழ்த்தியது.
ஆனாலும் ரன்ரேட் விகிதாசர அடிப்படையில் வெலாசிட்டி அணி, நடப்பாண்டு மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.