ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமாரை பின்னுக்குத் தள்ளி டிராவிஸ் ஹெட் முதலிடம்!

Updated: Wed, Jun 26 2024 14:27 IST
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமாரை பின்னுக்குத் தள்ளி டிராவிஸ் ஹெட் முதலிடம்! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கான போட்டிகள் நாளை நடைபெறவுள்ளன. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவை பின்னுக்குத்தள்ளி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் 4 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

அதேசமயம் சூர்யகுமார் யாதவ். பில் சால்ட், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தலா ஒரு இடம் பின் தங்கி அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். அதேசயம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸின் ஜான்சன் சார்லஸ் 4 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையும், ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

மேற்கொண்டு இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் 14 இடங்கள் முன்னேறி 13ஆம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் 10 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தையும், இந்திய வீரர் ரோஹித் சர்மா 13 இடங்கள் முன்னேறி 38ஆம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அக்ஸர் படேல் ஒரு இடம் முன்னேறி 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலின் டாப் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீரரும் அவர் மட்டுமே. அவரைத்தவிர்த்து குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறியுள்ளதுடன் புள்ளிப்பட்டியலின் 11ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக முதலிடத்தில் இருந்த ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபியை பின்னுக்கு தள்ளில் ஹசரங்கா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இத்தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 4 இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை