ENG vs AUS, 1st ODI: டிராவிஸ் ஹெட், லபுஷாக்னே அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Updated: Fri, Sep 20 2024 08:38 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவேற்றியைப் பதிவுசெய்த 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. 

இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது. அதன்படி நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பென்னி துவர்ஷியஸும், இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் அறிமுக வீரராக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பில் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். பின்னர் 17 ரன்கள் எடுத்திருந்தந் இலையில் பில் சால்ட் விக்கெட்டை இழந்தார். அதன்பின் டக்கெட்டுடன் இணைந்த வில் ஜேக்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் தங்களது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்கள் சேர்த்த நிலையில் வில் ஜேக்ஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதத்தை நெருங்கிய பென் டக்கெட்டும் 11 பவுண்டரிகளுடன் 95 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 39 ரன்களுக்கும், ஜேமி ஸ்மித் 23 ரன்களுக்கும், ஜேக்கப் பெத்தெல் 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதன் காரணமாக இங்கிலாந்து அணியானது 49.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 315 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் ஸாம்பா மற்றும் மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி  விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - கேப்டன் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 10 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்து அதிரடி காட்டிய ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். 

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தை கடந்த நிலையில், அவருடன் இணைந்து விளையாடிய கேமரூன் க்ரீனும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹெட்டுடன் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லபுஷாக்னே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுமுனையில் அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6ஆவது சதத்தை விளாசினார். 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிராவிஸ் ஹெட் 20 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 154 ரன்களையும், மார்னஸ் லபுஷாக்னே 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 77 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 44 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை