சஞ்சு சாம்சனிற்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி; பிசிசிஐ-யை விமர்சிக்கும் ரசிகர்கள்!
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் ஆகிய மொத்தம் 6 அணிகள் இந்த ஆசியக் கோப்பை 2023 தொடருக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த 6 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து விளையாடும். குரூப் ஏ பிரிவில் 3 அணிகளும், குரூப் பி பிரிவில் 3 அணிகளும் இருக்கும். இதில், இரு குழுவிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். இந்த சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலில் விளையாடும்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபால் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் இருக்கிறது. இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோஹித் ஷர்மா இடம்பெற்றுள்ளார். திலக் வர்மா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் இந்திய அணியின் 17 பேர் கொண்ட அணியில் இடம்பிடிக்காமல், கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், டி20 தொடரில் தனது வழக்கமாக இடத்திலிருந்து 6ஆவது இடத்தில் களமிறங்கிய சொதப்பினார். இருப்பினும் அயர்லாந்துடனான டி20 தொடரில் அதிரடியாக செயல்பட்டு அசத்தினார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்காததற்கு ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஏனெனில் இதுவரை ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் கூட விளையாடாத திலக் வார்மா, சமீப காலங்களில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ், காயத்திலிருந்து முழுமையாக குணமாகத கேஎல் ராகுல் அணியின் விக்கெட் கீப்பர் என இந்திய அணியில் சேர்த்திருப்பது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சஞ்சு சாம்சன் இதுவரை விளையாடிய 12 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 3 அரைசதங்கள் உள்பட 390 ரன்களை 55.77 சராசரியில் விளையாடியுள்ளார். அதேசமயம் சூர்யகுமார் யாதவ் இதுவரை விளையாடிய 26 ஒருநாள் இன்னிங்ஸில் இரண்டு அரைசதங்களுடன் 511 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிலும் அவரது சராசரியானது வெறும் 24.33 மட்டுமே.
இது ஒருபுறம் இருக்க கேஎல் ராகுல் ஆசிய கோப்பை தொடரின் முதல் இரு போட்டிகளுக்கு முன்னதாக முழு உடற்தகுதிய ஏட்டமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனகாக சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று பிசிசிஐயிடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சஞ்சு சாம்சன் குறித்தான ஹாஷ்டேக்குகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
*சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருக்கிறார்.