ஐபிஎல் 2022: ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்திக்கும் சிஎஸ்கே!

Updated: Sat, Apr 09 2022 20:16 IST
Image Source: Google

15ஆவது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக மொய்ன் அலி 48 ரன்களும், அம்பத்தி ராயூடு 27 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும், அபிஷேக் சர்மாவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே சென்னை அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த கூட்டணி அசால்டாக ரன்னும் சேர்த்தது.

பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் 40 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த ராகுல் த்ரிபாட்டியுடன் கூட்டணி சேர்ந்து தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிசேக் சர்மா, சென்னை அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்து மளமளவென ரன் குவித்தார்.

சென்னை அணியின் பந்துவீச்சை பாரபட்சமே பார்க்காமல் துவம்சம் செய்த அபிசேக் ஷர்மாவை ((75) பெரிய போராட்டத்திற்கு பிறகு 18வது ஓவரில் சென்னை அணி வெளியேற்றியது. அபிஷேக் சர்மாவை போல் ராகுல் த்ரிபாட்டியும் தன் பங்கிற்கு சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்து 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 17.4 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த தோல்வியின் மூலம் நடப்பு தொடரில் தொடர்ச்சியாக நான்காவது படுதோல்வியை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களே, சென்னை அணியின் இந்த தொடர் தோல்விக்கு காரணமான ருதுராஜ் கெய்க்வாட், பிராவோ போன்ற வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே போல் மறுபுறம் சென்னையை வீழ்த்தி தனது வெற்றி கணக்கை துவங்கியுள்ள ஹைதராபாத் அணிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை