இந்திய அணிக்கு இரண்டு புதிய பந்துவீச்சாளர்கள் கிடைத்துள்ளனர் - பராஸ் மாம்ப்ரே!

Updated: Sat, Aug 12 2023 14:15 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணிக்கு மகேந்திர சிங் தோனியின் காலத்திற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருந்து வருகிறது. அது என்னவென்றால் அணியின் பேட்டிங் வரிசையில் மேலிருந்து பேட்ஸ்மேன் யாரும் பந்து வீசக்கூடிய அளவில் இல்லை என்பதுதான். கங்குலி காலத்தை எடுத்துக் கொண்டால் கங்குலி, சச்சின், சேவாக், யுவராஜ் சிங் என்று ஒரு பெரிய பகுதி நேர பந்துவீச்சு படையே இருந்தது. 

இவர்கள் தனிப்பட்ட முறையில் பந்துவீச்சில் அணிக்கு வெற்றியும் தேடித் தந்திருக்கிறார்கள். இதற்கு அடுத்து மகேந்திர சிங் தோனியின் காலத்திற்கு வரும் பொழுது சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ரெய்னா என்று மீண்டும் இந்த வரிசை அப்படியே தொடர்ந்தது. இதில் விராட் கோலி கூட சில நேரங்களில் மிதவேக பந்துவீச்சை செய்திருக்கிறார்.

ஆனால் விராட் கோலி கேப்டன் பொறுப்புக்கு வந்த பிறகு பகுதிநேர பந்துவீச்சுக்கு ஆளே கிடையாது என்கின்ற நிலை ஏற்பட்டது. அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் ஏதாவது ஒரு இடத்தில் அடி வாங்கும் பொழுது, அவர்களைக் காப்பாற்றி தடுத்து வைக்கவும், எதிரணியை ஆச்சரியப்படுத்தி விக்கெட் எடுக்கவும், மேலும் ஒரு பேட்ஸ்மேனை அணிக்குள் கூடுதலாக கொண்டு வரவும் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் அணிக்குத் தேவைப்படுகிறார்கள்.

இப்படி இந்திய அணிக்கு பகுதிநேர பந்துவீச்சாளர்கள் இல்லாத காரணத்தினால், பேட்டிங் வரிசை ஏழாம் இடத்திலேயே நின்று விடுகிறது. மேலும் கேப்டனுக்கு களத்தில் பயன்படுத்த நிறைய பந்துவீச்சு விருப்பங்கள் இருப்பதில்லை. புதிய முயற்சிகள் எதையும் செய்தும் பார்க்க முடியாது. தொடர்ச்சியாக முக்கிய ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது. கூடுதலாக அணிக்குள் ஒரு பேட்ஸ்மேனையும் கொண்டுவர முடிவதில்லை.

இது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய பின்னடைவாக இருந்து வந்தது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில். இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டன் என்று பட்டியல் வரும். ஆஸ்திரேலியா பக்கம் போனால் அவர்கள் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களையே மூன்று பேரை வைத்திருக்கிறார்கள். போதாத குறைக்கு மேக்ஸ்வெல் பகுதிநேர பந்துவீச்சாளராக இருக்கிறார். இப்படி பெரிய அணிகளிடம் இந்த அஸ்திரம் பலமாக இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழும் விதமாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறும்பொழுது, “உங்களிடம் பந்துவீச்சை பகிர்ந்து கொள்ள ஒரு பகுதிநேர பந்துவீச்சாளர் இருந்தால் அது மிகவும் நன்றாக இருக்கும். நான் 2020 ஆம் ஆண்டு இந்திய அண்டர் 19 அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பொழுது திலக் வர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் பந்து வீசுவதை பார்த்திருக்கிறேன். அவர்கள் நல்ல பந்துவீச்சாளர்கள்.

அவர்களால் சர்வதேச மட்டத்திலும் நன்றாக பந்து வீச முடியும். இதுபோன்ற பந்துவீச்சு விருப்பங்கள் உங்களுக்கு இருப்பது மகிழ்ச்சியை தரக்கூடியது. அவர்கள் விரைவில் பந்து வீசுவதை பார்க்கலாம் என்று நம்புகிறேன். நாங்கள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். விரைவில் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஓவரையாவது வீசுவதை நாம் பார்ப்போம்.

டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய சாதகமான இப்படியான அமெரிக்க ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் உங்களை எப்பொழுதும் அடித்து விளையாட தொடர்ந்து வருவார்கள். நீங்கள் பந்து வீட்டில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது முக்கியம். திட்டங்களை தீர்மானிப்பதும் அதை செயல்படுத்துவதும் அவசியம். சரியாக கவனம் செலுத்தினால் வெற்றியை எட்ட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை